அரசியல்

சின்னம் கிடைக்குமா... சிக்கல் பிறக்குமா? -பயத்தில் ஈபிஎஸ் பதறாத ஓபிஎஸ்!

வீரமணி சுந்தரசோழன்

யாருமே எதிர்பாராத நேரத்தில் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி. இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக கலங்கிப்போய் நிற்பது அதிமுக தரப்புதான். அதிமுகவின் உயிர்நாடியான இரட்டை இலை சின்னம் இந்தத் தேர்தலில் களத்தில் இருக்குமா என்ற பயமே கலக்கத்துக்கான காரணம்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவேராவின் திடீர் இறப்பு காரணமாக, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் கடந்த முறையைப் போலவே, இம்முறையும் காங்கிரஸ் கட்சியே களமிறங்குகிறது. அதிமுக கூட்டணியில் கடந்தமுறை இங்கே போட்டியிட்ட தமாகா, இம்முறை அதிமுகவிடமே தொகுதியைக் கொடுத்துவிட்டு நாசூக்காக ஒதுங்கிவிட்டது.

ஆக, குழப்பம் அதிமுக தரப்பில் தான். ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையிலான தலைமை பிரச்சினை தொடர்பான வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விசாரணை முடிந்துவிட்டாலும் தீர்ப்பு இப்போதைக்கு வருவதற்கான வாய்ப்பில்லை. அப்படியே தீர்ப்பு வந்தாலும்கூட, மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. எனவே தற்போதைய சூழலில், அதிமுகவின் இரண்டு அணிகளுக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்க சாத்தியமில்லை.

இதுபோன்றதொரு இக்கட்டான நிலைப்பாட்டில் தான் மகாராஷ்டிர மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தனி அணியாகவும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சிவசேனாவின் ‘வில் அம்பு’ சின்னத்தில் போட்டியிட விரும்பியது. ஆனால், ஷிண்டே தரப்பும் இதற்கு உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம், கட்சியின் பெயரையும், ‘வில் அம்பு’ சின்னத்தையும் முடக்கியது. இருதரப்புக்கும் வெவ்வேறு பெயர்களையும், வெவ்வேறு சின்னங்களையும் தேர்தல் ஆணையம் வழங்கியது.

அதிமுகவிலும் இருமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. 1989-ல் ஜெயலலிதா - ஜானகி அணிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்புக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் 2017-ல் சசிகலா அணி, ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் வழங்கப்பட்டன.

அதுபோல தற்போதுள்ள சூழலில் ஈரோடு கிழக்கில் ஈபிஎஸ் அல்லது ஓபிஎஸ் தரப்பில் யார் களமிறங்கினாலும், இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படும் அபாயம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், தலைமை பிரச்சினை காரணமாக இரட்டை இலைக்கான ‘பி’ படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக கையெழுத்திட முடியாமல் போனதால் அத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. இப்போது இரண்டாவது முறையாக, இந்த இடைத்தேர்தலிலும் சின்னம் தொடர்பான சிக்கலில் அல்லாடிக் கொண்டிருக்கிறது அதிமுக. இதன் காரணமாக அதிமுகவின் தலைவர்களும், தொண்டர்களும் கடும் விரக்தியில் உள்ளனர்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்து கையெழுத்து போட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது உறுதி. ஆனால், அதற்கான சாத்தியமில்லை. ஆனாலும் இரண்டு அணிகளுமே போட்டியிடுவதில் தீவிரம் காட்டுகிறது. ஈபிஎஸ் தரப்பில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க தமாகாவிடம் பேசி தொகுதியை தங்களுக்காக கேட்டு வாங்கி இருக்கிறார்கள். ஓபிஎஸ் தரப்போ பாஜக தலைமை எங்களைத்தான் ஆதரிக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காக பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்தித்துப் பேசி இருக்கிறது.

மேலும், ”அதிமுக தரப்பில் வேட்பாளரை நிறுத்தப்போகிறோம்; தேர்தல் படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நானே கையெழுத்திடுவேன்” என்று ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைக்காது போனாலும் சுயேட்சையாக நிற்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதேவேளை, பாஜக நிற்பதாக இருப்பின் ஆதரவளிக்கவும் தயார் என்று பாஜகவுக்கு பாசக்கரமும் நீட்டியிருக்கிறார்.

கொங்கு மண்டலத்தில் பெரிதாக தங்களால் பெரிதாக எதையும் சாதிக்கமுடியாது என்பது ஓபிஎஸ் அணிக்கு தெரியும். அதனால் தான் முந்திக்கொண்டு பாஜக தலைவரைச் சந்தித்துப் பேசுவது முதல், பாஜக நின்றால் ஆதரவு என்ற அறிவிப்பு வரை சிநேகம் பாராட்டுகிறது. இந்தத் தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதை விட, பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது அல்லது அதற்கான தோற்றத்தை உருவாக்கி அரசியலில் அடுத்தகட்டத்துக்கு நகர்வது தான் ஓபிஎஸ் பிளான் என்பதாக தெரிய வருகிறது.

இந்த பிளான் சக்சஸ் ஆகி ஈரோடு கிழக்கில் பாஜக வேட்பாளர் களமிறக்கப்பட்டால் ஈபிஎஸ் அதிமுகவுக்கும் - பாஜகவுக்குமான போட்டியாக அது மாறி நிற்கும். இதன் மூலம் ஈபிஎஸ் தரப்பை பாஜகவிடம் இருந்து பிரித்துவிடமுடியும் என தந்திரக் கணக்குப் போடுகிறார் ஓபிஎஸ். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் இந்தத் தேர்தலில் பலத்தை சோதித்துப் பார்க்க நினைக்கிறது.

ஓபிஎஸ் , ஈபிஎஸ் இருவருமே தங்களது வேட்பாளர்களை நிறுத்துவதில் தீர்மானமாக இருந்தால், அதிமுகவுக்குள் ஒற்றுமை இல்லை என்ற காரணத்தைச் சொல்லி பாஜகவும் வேட்பாளரை நிறுத்தும். பலம் காட்டுவதற்காக இந்த மூன்று தரப்பும் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே காங்கிரஸ் வேட்பாளர் கரைசேர கணிசமாகக் கைகொடுக்கும்.

மற்றவர்களுக்கு எப்படியோ, “அதிமுக எங்களிடம் தான் உள்ளது, 95 சதவீத நிர்வாகிகள் எங்கள் பக்கமே்” என மார்தட்டிச் சொல்லி வரும் ஈபிஎஸ் சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்ற பயத்தில் இருக்கிறார். அப்படியான எந்தப் பதற்றமும் இல்லாதவராக காட்டிக்கொள்ளும் ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் ’அதிமுக’ போட்டி என்று அறிவித்தது முதல், பாஜக நிற்கும் எனில் ஆதரவளிக்கத் தயார் என்றது வரை அழகாய் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார்!

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

SCROLL FOR NEXT