டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன் 2 ஆண்டுகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது: காரணம் சொல்லும் டி.டி.வி.தினகரன்!
அரசியல்

2 ஆண்டுகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது: காரணம் சொல்லும் டி.டி.வி.தினகரன்!

காமதேனு

தமிழ்நாட்டில் நல்லாட்சி தருவதாக கூறி திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளும், மக்கள் துயரத்தின் தொடர் ஆண்டுகளாகத்தான் இருந்து வருகிறது என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘’நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வோம் என்றும், அந்த வித்தை தங்களுக்குத் தெரியும் என்றும் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகள் கடந்தும் அதற்கான முன்னெடுப்பு கூட முழுமைபெறாத நிலை உள்ளது.

ஆனால், ஒட்டு மொத்தத் தமிழகமும் மீனவர்களும், சுற்றுச் சூழலியலாளர்களும் தெரிவித்த எதிர்ப்பினை புறந்தள்ளி 80 கோடியில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்காக மத்திய அரசிடமிருந்து மாயாஜாலமாக அனுமதியைப் பெற்றது எப்படி? ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என்று சொல்லிக்கொண்டு அவர்களுடன் ஒன்றி இந்த அனுமதியைப் பெற்றார்களா என மக்கள் கேட்கிறார்கள்.

காவல் நிலையத்திற்குள்ளேயே திமுகவினர் தங்களுக்குள் நடத்திய தாக்குதல், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற படுகொலைகள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், சங்கிலி பறிப்பு சம்பவங்கள், கோயில் விழாக்களில் தீண்டாமை, குடிநீரில் தீண்டாமை, திரையரங்குகளில் தீண்டாமை, காவல்துறைக்கே பாதுகாப்பற்ற சூழல், பெண் காவலருக்கு எதிராக ஆளுங்கட்சி தரப்பினரால் ஏற்பட்ட பாலியல் சீண்டல் என அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் பல நடந்தவண்ணம் உள்ளன.

கோடநாடு கொலை கொள்ளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டக்குழுவினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் போன்று தமிழகத்தை உலுக்கிய குற்றங்களில் சட்ட ரீதியான தண்டனை பெற்றுத்தரும் முயற்சியில் நத்தையின் வேகத்தைக்கூட திமுக அரசிடம் காண முடியவில்லை.

அரசின் தூதர்களாக, மக்களின் சேவகர்களாக திகழ வேண்டிய அமைச்சர்கள், ஆணவமாக மக்களை நடத்திய விதத்தைக் கண்டு ஒட்டு மொத்தத் தமிழகமும் அதிர்ச்சிக்குள்ளானது. அரசின் திட்டங்களினால் பயனடையும் மகளிரை ஏளனமாகப் பேசுவது, குறைகளைத் தெரிவிக்க வரும் மக்களிடம் பாகுபாடு பார்ப்பது, பொதுமேடையில் சாதிப் பெயரைப் பயன்படுத்துவது, அடிப்பது, கல்லெறிவது, அரசு அதிகாரிகளை மிரட்டுவது, அச்சுறுத்துவது என கட்டுப்பாடு இல்லாமலும், தாங்கள் என்ன பொறுப்பில் உள்ளோம் என்பதை உணராமலும் செயல்படும் அமைச்சர்களால் 'தூக்கமில்லாமல் தவிக்கிறேன்' என்று முதலமைச்சர் ஊடகங்களின் முன் புலம்பியதற்குப் பின்னாலும், இந்த அமைச்சர்களின் ஆணவப் போக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மக்களிடம் அன்பாகவும், ஆணவ அமைச்சர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்ள வேண்டிய முதலமைச்சர், அதற்கு நேர் மாறாக நடந்து கொள்வது விந்தையிலும் விந்தையாக உள்ளது.

அதிகாரத்துக்கு நெருக்கமானவர்களின் குடும்பத்தினர் தமிழகத்தில் ரியல் எஸ்டேட், சினிமா உள்ளிட்ட துறைகளில் வணிக அறத்துக்கு மாறாக ஏகபோக ஆதிக்கம் செலுத்தி கோடிகளைக் குவித்ததாக தகவல்கள் வரும் நிலையில், முதல்வரின் மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைக் குவித்திருக்கின்றனர் என்று நிதியமைச்சர் புலம்பியதாக வெளியான ஆடியோவை கேட்டு மக்கள் அதிச்சியடைந்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இனி மிச்சமிருக்கும் காலங்களிலும் இந்த அரசு மக்கள் நலனில் கவனம் கொள்ளும் என்ற நம்பிக்கையோ, அறிகுறியோ தென்படவே இல்லை.

இப்படி மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுகவிற்கு வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்பது உறுதி’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT