அரசியல்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உயிரை மாய்க்க முயன்ற திமுக நிர்வாகி: என்ன காரணம்?

ரஜினி

வேலை வாங்கித் தருவதாக கூறி 18 லட்சம் மோசடி செய்ததாக திமுக கவுன்சிலர் மீது திமுக ஐடி விங்க் அமைப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் ஆணையர் அலுவலகம் முன்பு திமுக நிர்வாக தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரி காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் மூன்றாவது வாயில் அருகே திடீரென வாலிபர் ஒருவர் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸார் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற நபரிடம் நடத்திய விசாரணையில், வேளச்சேரியை சேர்ந்த சதீஷ் என்பதும், இவர் சென்னை 176-வது வார்டு திமுக ஐடி விங்க் அமைப்பாளராக இருந்து வருவதும் தெரியவந்தது. மேலும் 176-வது வார்டு கவுன்சிலர் ஆனந்தம் தன்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், தற்போது வேலை வாங்கி தராமல் தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

கவுன்சிலர் ஆனந்திடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, மாவட்ட செயலாளருக்கு பணத்தை செலவு செய்துவிட்டதாகவும் இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பணத்தை தர மறுத்து தன்னை மிரட்டுவதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து பணத்தை மீட்டுக்கொடுக்கும் படி காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், நேற்று மீண்டும் கவுன்சிலர் ஆனந்தம் அடியாட்களுடன் வந்து வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி வருவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து தீக்குளிக்க முயன்ற சதீஷை வேப்பேரி போலீஸார் அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT