அரசியல்

மாமூல் கொடுக்காததால் பெண் வியாபாரி மீது தாக்குதல்: திமுக கவுன்சிலரின் கணவர் கைது

காமதேனு

நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டி, பெண் வியாபாரியை அடித்த திமுக பெண் கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் வசிப்பவர் மோகனா(49). இவர் கடந்த 27 வருடமாக வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் சாலையோரம் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக 51-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் அப்பகுதியில் சாலையோரம் கடை நடத்தி்வரும் வியாபாரிகளிடம் தினமும் 200 ரூபாய் மாமூல் தரவேண்டும், இல்லையெனில் கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் கவுன்சிலர் கணவர் ஜெகதீசன் சாலையோரம் துணிக்கடை நடத்தி வரும் மோகனாவிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு மோகனா மாமூல் தரமுடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் தகாத வார்த்தையால் திட்டி, அவரை அடித்து, உடம்பில் கை வைத்து தள்ளி அசிங்கப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்கம்போல் மோகனா கடையில் இருந்த போது அங்கு சென்ற நபர் ஒருவர் அண்ணன் ஜெகதீசன் மாமூல் வாங்கி வருமாறு கூறியதாக பணம் கேட்டு் மிரட்டியுள்ளார். மோகனா பணம் கொடுக்க மறுக்கவே உடனே அந்த நபர் ஜெகதீசனுக்கு போன் செய்து மோகனாவிடம் கொடுக்க போனில் ஜெகதீசன் அவரை தகாத வார்த்தையில் திட்டி, உனது கடையை காலி செய்து விடுகிறேன் என கூறியதன் பேரில் மாநகராட்சி குப்பை அல்லும் வாகனத்தில் வந்த சிலர் மோகனா கடையை காலி செய்ய முயன்றனர்.

உடனே அங்கிருந்து வியாபாரிகள் ஒன்று கூடி கவுன்சிலரின் கணவர் ஜெகதீசனுக்கு எதிராக கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீஸார் அவர்களை சமாதானம் செய்தார். பின்னர்கள் அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் வியாபாரி மோகனா வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டிய கவுன்சிலர் கணவர் ஜெகதீசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

இந்தநிலையில் ஜெகதீசன் மதுரையில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீஸார் மதுரை சென்று அங்கு பதுங்கியிருந்த ஜெகதீசனை கைது செய்து நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கவுன்சிலர் ஜெகதீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் மது அருந்தி கொண்டிருந்த போது அதனை தட்டி கேட்ட ரோந்து காவலர்களை மிரட்டிய வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT