அரசியல்

ஆளுநருக்கு எதிராக அவதூறு: திமுக பேச்சாளர் சஸ்பெண்ட்!

காமதேனு

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து முறைகேடாக பேசியது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன் மத்தியில், கட்சியின் தலைமை கழக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவரை இடைநீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டமொன்றில் பேசிய திமுக தலைமை கழக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பலதரப்பினர் மத்தியில் ஆட்சேபத்தையும் பெற்றது.

குறிப்பாக பாஜகவினர், திமுக பேச்சாளரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவின் சார்பில் காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வீடியோ தொடர்பாக ஆளுநர் மாளிகையும் எதிர்வினையாற்றியது.

ஆளுநருக்கான துணை செயலர் பிரசன்னா ராமசாமி என்பவர் இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையருக்கு முறைப்படி புகார் அளித்தார். காவல்துறையும் உரிய நடவடிக்கையில் இறங்கியது. இதற்கிடையே, திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பின் பெயரிலான இந்த ஒழுங்கு நடவடிக்கையின் கீழ், ’சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT