அகிலேஷ் யாதவ் உடன் டிம்பிள் யாதவ் 
அரசியல்

சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள் யாதவுக்கு எதிராக இணையத்தில் பரவும் ஆபாசம்! தொண்டர்கள் அதிர்ச்சி!

காமதேனு

சமாஜ்வாதி கட்சியின் எம்பியும், கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான, டிம்பிள் யாதவுக்கு எதிராக இணையத்தில் பரப்பப்படும் ஆபாசம் மற்றும் அவதூறுகளை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் தனது மாமனாருமான முலாயம்சிங் யாதவின் மறைவை அடுத்து, அவரது மைன்புரி தொகுதியில் நின்று எம்பியாக தேர்வானவர் டிம்பிள் யாதவ். இவரை குறிவைத்து அண்மைக் காலமாக இணையத்தில் ஆபாசம் மற்றும் அவதூறுகளை சிலர் திட்டமிட்டு பரப்பி வந்தனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிலர் டிம்பிள் யாதவை தனிப்பட்ட முறையில் தூற்றியும், அவதூறான கருத்துக்களை பதிவிட்டும் வருவதாக புகார் எழுந்தது. டிம்பிள் யாதவ் புகைப்படத்தை இணைத்து மார்பிங் முறையிலும் பதிவிடுவது தொடரவே சமாஜ்வாதி தொண்டர்கள் கொதித்தனர். மேலும், டிம்பிள் சார்ந்திருக்கு யாதவ் சமூகத்தை குறிவைத்தும் அவதூறுகள் கிளம்பவே, சமூக அமைப்புகளும் அதிருப்தி தெரிவித்தன.

அகிலேஷ் உடன் டிம்பிள்

டிம்பிள் யாதவுக்கு எதிரான அவதூறுகள் குறித்து சமாஜ்வாதி கட்சியினரே இணையத்தில் பொறிவைத்து காத்திருந்தனர். அப்படி துழாவியதில் சில இந்துத்துவ அமைப்புகளின் பின்னணியில் இயங்கும் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவை தொடர்பாக காவல்துறையில் புகாரும் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, டிம்பிள்க்கு எதிராக அவதூறு கிளப்பியவர்களை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிம்பிள் யாதவ்க்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக ராம்தானி ராஜ்பர் என்பவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய குற்றவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளின் கீழ் ராஜ்பர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அவதூறு பரப்பியவரை அடையாளம் காட்டிய பிறகும் அவர்களில் ஒருவர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்ததுடன், அவரையும் கைது செய்யாது இழுத்தடிப்பதாக சமஜ்வாதி கட்சியினர் குமுறி வருகின்றனர்.

SCROLL FOR NEXT