டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம் 
அரசியல்

முதல்வர் சிறையில் இருந்தால் இதையும் நாங்கள் தான் செய்ய வேண்டுமா... டெல்லி அரசை ஓங்கிக் குட்டிய உயர் நீதிமன்றம்!

காமதேனு

டெல்லி முதலமைச்சர் சிறையில் இருப்பதால், அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா என டெல்லி உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி மாநிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 2 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் மன்மீத் அரோரா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

பாட புத்தகங்கள்

அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதான் பராசத், “மாநில முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் மாநில அமைச்சரால் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை” என தெரிவித்தார். மேலும், “இது தொடர்பாக துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்ட போதும் அவர் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவை எடுக்கவில்லை” எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

டெல்லி உயர்நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “முதலமைச்சர் சிறையில் இருந்தே பணியாற்ற வேண்டும் என விரும்பினால் அது உங்களின் நிர்வாகம் சார்ந்த முடிவு. ஆனால், முதலமைச்சர் சிறையில் இருப்பதால் என்னால் முடிவெடுக்க முடியவில்லை என அமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல. தேசிய நலன் என்பதை விட்டுவிட்டு உங்களின் சொந்த விருப்பங்களை மேலே வைத்திருக்கிறீர்கள்.

இதை எங்களைக் கூற நீங்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறீர்கள். மாணவர்கள் பாடப் புத்தகங்கள் இல்லாமல் இருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. மாநில அரசுக்கு பதவியின் மீது தான் அக்கறை இருக்கிறது. மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்குவது நீதிமன்றத்தின் வேலை அல்ல. ஆனால், உங்கள் வேலையை நீங்கள் செய்ய தவறியதால் நாங்கள் அதை செய்ய வேண்டி இருக்கிறது” என காட்டமாக தெரிவித்தனர்.

மேலும், “தற்போதைக்கு மிகவும் தன்மையான முறையில் இதை தெரிவித்து இருக்கிறோம். விரைவில் முடிவெடுக்காவிட்டால் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டி இருக்கும்” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜரான எம்சிடி ஆணையர், ”நிலைக் குழு இல்லாததால் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை வழங்க தனக்கு அதிகாரம் இல்லை. இதன் காரணமாகவே பாடப் புத்தகங்கள் கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது” என விளக்கம் அளித்து இருந்தார். நிலைக்குழு அமைக்க வேண்டுமென மாநில அரசு வழங்கிய பரிந்துரையை இதுவரை துணைநிலை ஆளுநர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

SCROLL FOR NEXT