விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பவன்கேரா.
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பவன்கேரா. டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திடீர் கைது: மோடியை விமர்சித்ததால் நடவடிக்கை?
அரசியல்

டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திடீர் கைது: மோடியை விமர்சித்ததால் நடவடிக்கை?

காமதேனு

டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேராவை அசாம் போலீஸார் இன்று திடீரென கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன்கேரா இன்று காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இண்டிகோ விமானத்தில் ராய்ப்பூருக்குச் சென்றார். இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் அவரை அசாம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அசாம் காவல்துறை உயர் அதிகாரி பிரசாந்த் புயான் கூறுகையில்," அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹஃப்லாங் காவல் நிலையத்தில் பவன்கேரா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். ஆனால், என்ன புகார் என்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

பவன்கேரா கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கேராவுக்கு எதிரான நடவடிக்கை மோடி அரசின் சர்வாதிகாரப்போக்கைக் காட்டுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் கேரா கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து வருகின்றன. உலக கோடீஸ்வரர் பட்டியலில் பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ள கௌதம் அதானிக்கு பிரதமர் மோடி சாதகமாக இருப்பதாக எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மும்பையில் கடந்த 17-ம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தொழிலதிபர் கௌதம் அதானியுடன் பிரதமர் மோடியைத் தொடர்புபடுத்தும் வகையில், 'நரேந்திர கௌதம்தாஸ் மோடி' என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா விமர்சனம் செய்தார். இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், டெல்லியில் பவன்கேராவை அசாம் போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT