ஜோதிமணி
ஜோதிமணி 
அரசியல்

டெல்லி சாலையில் காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்ட ஜோதிமணி: `பயப்பட மாட்டோம்' என முழக்கம்

காமதேனு

ராகுல் காந்தியிடம் நடத்தப்படும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராடிய கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உட்பட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேஷனல் ஹெரால்டு பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் தாக்கியதில் பல காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு கூடும் காங்கிரஸ் நிர்வாகிகள், ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், காங்கிரஸ் நிர்வாகிகளின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இன்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தலைமையில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது ஜோதிமணி உள்ளிட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸார் வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய ஜோதிமணி, "ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டு பயப்பட மாட்டோம்" என தெரிவித்தார்.

மேலும், "பெண் நாடாளுமன்ற உறுப்பினரான என் மீது மிகக்கொடூரமாக காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது. என் ஆடைகளை கிழித்து, காலணிகளை பிடுங்கி, தண்ணீர்கூட கொடுக்காமல் அலைக்கழிக்கின்றனர்" எனவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT