அரசியல்

நாங்கள் கட்டிய அரங்கில் பதவியேற்றமைக்கு வாழ்த்துகள்!

காமதேனு

50,000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட அரங்கான, அடல் பிஹாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதான அரங்கில் இன்று முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட யோகி ஆதித்யநாத்துக்கு வஞ்சப் புகழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

பதவியேற்பு விழா முடிந்த சில நிமிடங்களில் இந்தியில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார் அகிலேஷ். அதில், “சமாஜ்வாதி அரசு கட்டிய அரங்கில் பதவியேற்றுக்கொண்ட புதிய அரசுக்கு வாழ்த்துகள். இந்தப் பதவியேற்பு, வெறுமனே அரசமைப்பது என்பதாக மட்டும் அல்லாமல், மக்களுக்கு நிஜமாகவே தொண்டாற்றும் வகையில் இருக்கட்டும்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அகிலேஷ் ஆட்சிக்காலத்தில் இந்த அரங்கின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2017-ல் திறக்கப்பட்ட இந்த மைதானம் அகிலேஷின் கனவுத் திட்டம் ஆகும். 2017 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த யோகி ஆதித்யநாத், 2018-ல் இம்மைதானத்துக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் இகானா எனப் பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆஸம்கர் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக இருந்த அகிலேஷ், இந்தத் தேர்தலில் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினராகிவிட்டார். இதையடுத்து, தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு எம்எல்ஏ-வாக உத்தர பிரதேச அரசியலில் மேலும் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் அகிலேஷ். ஆரம்பமே அதிரடியாகத்தான் இருக்கிறது!

SCROLL FOR NEXT