அரசியல்

நடிகர் சூரி உணவகத்தில் வணிக வரித்துறை சோதனை நடத்தியது ஏன்?- அமைச்சர் மூர்த்தி விளக்கம்

காமதேனு

``மதுரையில் உள்ள நகைச்சுவை நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்டு நடைபெற்றது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. வணிக வரித்துறையின் வழக்கமான செயல்தான்'' என அமைச்சர் மூர்த்தி கூறினார்.

தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டிக் கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “போலி பத்திர ரத்துச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம் நிலத்தைப் பறிகொடுத்தவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுசெய்து நிலத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். திமுக ஆட்சிக்கு வந்தபின்பு வணிகவரித்துறை மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாயும், பத்திரப்பதிவு மூலம் 8,300 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நடிகர் சூரி எனது தொகுதிக்காரர். எனக்கு நல்ல நண்பர். அவர் உணவகத்தில் நடத்தப்பட்ட சோதனை வேண்டும் என்றே நடந்தது போல் சிலர் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். வணிக வரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வணிக வரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. யாருடைய தலையீடும் இல்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் இல்லை. வணிக வரித்துறையினர் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஆய்வுசெய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. வரி ஏய்ப்பு செய்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு” என்றார்.

SCROLL FOR NEXT