ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் வைத்துள்ள வேட்பாளர் சாந்தி, அவரது கணவர் ராம்குமாருடன் 
அரசியல்

சத்தீஸ்கர் தேர்தல் சுவாரஸ்யம்... ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பழங்குடி பெண் வேட்பாளர்!

காமதேனு

வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாத பழங்குடியின பெண் வேட்பாளர் ஒருவர், சத்தீஸ்கர் மாநில மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது கவனத்தை ஈர்த்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என கருதப்படும் இந்தியாவின் மக்களவைத் தேர்தல்கள் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மூன்றாவது கட்டத் தேர்தல் நடைபெறும் நிலையில், 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது அக்கவுண்டில் ஒரு ரூபாய் கூட இல்லை என கணக்குக் காட்டி தேர்தலில் போட்டியிடுவது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மகனுடன் வேட்பாளர் சாந்தி

கோர்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 33 வயது சாந்தி பாய் மராவி தான் அந்த கவனத்தை ஈர்த்து வரும் சுயேச்சை வேட்பாளர். பைகா என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை எனவும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் மட்டுமே தான் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் மாதரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இவரது வங்கிக் கணக்கிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் என இரண்டு மாதத்திற்கு 2.000 ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பணத்தை அவர் வேறு வங்கிக் கணக்கு ஒன்றுக்கு மாற்றம் செய்து பயன்படுத்தியிருக்கிறார்.

பைகா பழங்குடியின மக்கள்

தங்களுடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு என அவர் 97 ஆயிரம் ரூபாயைக் கணக்கு காட்டியுள்ளார். சாந்தியை பொறுத்தவரை தங்கள் பகுதியில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இதுவரை அரசுகள் செய்து கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது பழங்குடியின கிராமத்திற்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக பழங்குடியின வேட்பாளர் 12,500 ரூபாயை செலுத்த வேண்டும் என்ற நிலையில் விவசாய பணிகளை மட்டும் மேற்கொண்டு வரும் சாந்தி மற்றும் அவரது கணவர் ராம்குமாரால் இந்த தொகையைத் திரட்ட முடியவில்லை. இதனால் பழங்குடியின மக்களிடம் பேசி அவர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியை வைத்து டெபாசிட் தொகையை செலுத்தியுள்ளனர்.

தான் வெற்றி பெற்றால் உடனடியாக தங்கள் பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என சாந்தி உறுதியளித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட சாந்தி, தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT