பலத்த பாதுகாப்பில் பிரதமர் மோடி 
அரசியல்

‘கேரளா வருகை தரும் பிரதமர் பாதுகாப்பில் ஏகப்பட்ட சொதப்பல்’ -மாநில முதல்வரை விளாசும் மத்திய அமைச்சர்!

காமதேனு

கேரளா வருகை தரும் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாநில அரசு கவனக்குறைவாக இருப்பதாக மத்திய அமைச்சர் முரளிதரன் சாடியுள்ளார்.

நாளை மாலை 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி கேரளா வருகை தருகிறார். வந்தே பாரத் ரயில் தொடங்கி வைப்பு, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்டவற்றை அவர் மேற்கொள்கிறார். ஆனால், நாட்டின் உச்சபாதுகாப்புக்கு உரியவரான பிரதமருக்கு உரிய ஏற்பாடுகளை செய்வதில் மாநில அரசு மெத்தனம் காட்டுவதாக மத்திய அமைச்சர் முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலாவதாக, பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான மிரட்டல் கடிதம் பாஜக அலுவலகத்துக்கு வந்தது. இது தொடர்பாக ஜானி என்பவரை பிடித்து விசாரித்தபோது, அதை அவர் எழுதவில்லை என்பது தெரிய வந்தது. அவருக்கு சிக்கல் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது பக்கத்து வீட்டுக்காரரான சேவியர் என்பவர் இந்த கடிதத்தை எழுதியதாக பின்னர் தெரிய வந்தது. ஆனால் இந்த விசாரணையில் உரிய முடிவு எட்டப்படாது, ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்த காவல்துறை குழப்பங்கள் விமர்சனங்களுக்கு ஆளாகின.

அடுத்தபடியாக, பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு வளையங்கள், அவற்றில் பங்கேற்கும் காவல்துறை அதிகாரிகள் குறித்த விவரங்கள் என சகமும் அடங்கிய 49 பக்க ரகசிய ஆவணம் சாதாரணமாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இதற்கு பொறுப்பாளியான ஏடிஜிபி அந்தஸ்திலான அதிகாரி தற்போது விசாரணைக்கு ஆளாகி இருக்கிறார். இது குறித்தும் கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் முரளிதரன், பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள முதல்வர் அக்கறைகாட்டவில்லை எனவும் சாடியுள்ளார்.

SCROLL FOR NEXT