அரசியல்

பாதுகாப்பற்ற செயலிகளை இணைக்கக் கூடாது- கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

காமதேனு

சட்ட விரோத மற்றும் பாதுகாப்பற்ற செயல்களை இணைக்கக் கூடாது என கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

செல்போன் பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பிளே ஸ்டோர்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த இரண்டு ப்ளே ஸ்டோர்களிலும் புதிய புதிய செயலிகள் இணைந்து கொண்டே இருக்கின்றன. அப்படி இணையும் செயலிகளில் கடன் செயலிகள், சூதாட்ட விளையாட்டு செயலிகள்  உள்ளிட்டவை பொதுமக்களை எளிதில் கவர்ந்து அவர்களை தங்கள் வலையில் சிக்க வைக்கின்றன. 

இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை இழந்தும்,  கடன் நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். இது குறித்த புகார்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து சென்ற வண்ணமே உள்ளன. இந்த நிலையில் பாதுகாப்பற்ற செயலிகளை இணைக்கக்கூடாது என்று இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஜிவ் சந்திரசேகர்

இது பற்றி பேசிய மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை  அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இந்தியர்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. எனவே இந்த இரண்டிலும்  சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற செயலிகளை இணைக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.  மேலும் கடன் வழங்கும் நிறுவனங்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இணையத்தை பாதுகாத்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT