ஓபிஎஸ் 
அரசியல்

தேர்தல் விதிமீறல்... 3 பிரிவுகளில் ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு

காமதேனு

தேர்தல் பிரச்சார விதிமீறல் புகார்களின் அடிப்படையில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம் அங்கம் வகிக்கிறார். இவர் நடப்பு மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரம் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுயேட்சை என்ற அடிப்படையில் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார்.

பிரச்சார களத்தில் ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் விதிமீறல்கள் அடையாளம் கண்டறியப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் புகார்கள் எழுந்துள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக கூட்டம் நடத்தியது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்டவை தொடர்பாக ஓபிஎஸ் மீது புகார் எழுந்தது.

நேற்று அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓபிஎஸ் சார்பில் பணம் கொடுக்கப்பட்டதாக முதல் புகார் இருந்தது. மேலும் அவர் நடத்திய கூட்டம் ஒன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து தொடர்ந்ததாக இரண்டாவது புகார் எழுந்தது. இவை உட்பட 3 புகார்கள் தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த பின்னணியில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக தரப்பில் தனக்கு கடும் நெருக்கடி எழும் என்பதால், தேர்தல் பிரச்சாரத்தில் முந்திக்கொண்டு தீவிரமாக ஓபிஎஸ் களமாடி வருகிறார். இதற்காக சமூக வலைதளங்களிலும் அவரது ஆதரவாளர்கள் பெயரில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறாது. இதனிடையே பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் எதிர்வரும் தமிழக பிரச்சார தொகுதிகளில், தனது ராமநாதபுரம் தொகுதியையும் சேர்க்க ஓபிஎஸ் கோரி வருகிறார். இது தொடர்பாக பாஜகவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததில், தானே பிரச்சாரக் களத்தில் சோலோவாக சுழன்று வருகிறார்.

SCROLL FOR NEXT