பாஜகவினர் தாக்கியதில் காயமடைந்த சிபிஎம் தொண்டர்
பாஜகவினர் தாக்கியதில் காயமடைந்த சிபிஎம் தொண்டர் 
அரசியல்

தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்... தட்டிக்கேட்டவரை தாக்கிய பாஜக தொண்டர்கள்!

காமதேனு

கோவையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவினரை தட்டி கேட்டவர்களை, பாஜகவினர் தாக்கியதில் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்றிரவு பீளமேடு பகுதியில் அண்ணாமலையை ஆதரித்து தெலுங்கு தேசம் கட்சியின் நர லோகேஷ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இரவு 10 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற விதி அமலில் இருக்கும் நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் பாஜகவினர் அங்கிருந்து கிளம்பினர்.

பின்னர் பேரணியாக ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முழக்கங்கள் எதுவும் எழுப்பாமல் வேனில் சென்ற அண்ணாமலை மற்றும் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இரவு 10 மணிக்கு மேல் ஊர்வலமாக சென்ற பாஜகவினர்

விதிமுறைகளை மீறி இரவு 10.40 மணி வரை அவர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது போலீஸார் தங்களது வேனில் இருந்தபடி கூட்டத்தினரை கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து போக மறுத்த பாஜகவினர், ’பாரத் மாதா கி ஜே’ என போலீஸாரை நோக்கி முழக்கம் எழுப்பினர்.

தட்டிக்கேட்டவர்களை தாக்கும் பாஜகவினர்

போலீஸாரிடம் இது தொடர்பாக தகவல் அளித்து கொண்டிருந்த திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை சூழ்ந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் தாக்கியதில், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏழு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து போக அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் சம்பவ இடத்தில் போலீஸாருடன் பேச்சுவார்த்தை

இதனிடையே தங்களை தாக்கிய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் ஆவாரம்பாளையத்தில் நள்ளிரவில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் எம்எல்ஏ-வான கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், இந்தியா கூட்டணி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக குணசேகரன் என்பவர் பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாஜகவைச் சேர்ந்த ஆனந்தன், மாசாணி, லட்சுமி, செந்தில், ரங்கநாதன் உள்ளிட்ட 5 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT