திமுக கவுன்சிலர் புனிதா அரசு ஜல்லியைத் திருடியதாக திமுக கவுன்சிலர் புனிதா மீது வழக்கு
அரசியல்

அரசு ஜல்லியை ஆட்டையைப் போட்டதாக புகார்: திமுக பெண் கவுன்சிலர் மீது பாய்ந்தது வழக்கு

காமதேனு

சேலத்தில் அரசு கட்டுமானப் பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லியைத் திருடியதாக திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்பட குடும்பத்தினர் நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாநகராட்சி 47-வது வார்டு பகுதியில் குடிசைமாற்று வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகளுக்காக ஜல்லி, மணல் செங்கல் உள்ளிட்டவற்றை அப்பகுதியில் கொட்டி வைத்திருந்தனர். அதனை 47-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் புனிதா திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த நவமணி என்ற பெண், சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில்," திமுக கவுன்சிலர் புனிதா, கார்கில் நகரில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் குடியிருப்புகளுக்காக வைத்திருக்கும் ஜல்லிகளைத் திருடி வருகிறார். புனிதா மட்டுமல்லாமல் அவரது கணவர் சுதந்திரம், சந்தை வி.எம்.துரை, துரையின் சகோதரி தாமரைச்செல்வி ஆகியோர் அரசின் கட்டுமானப்பணிகளுக்காக வைத்திருக்கும் ஜல்லியைத் திருடி வருகின்றனர். இதனைத் தட்டிக்கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

ஆனாலும், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் புகார் கொடுத்த நவமணி மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து திமுக கவுன்சிலர் புனிதா, அவரது கணவர் சுதந்திரம், புனிதாவின் தந்தை வி.எம். துரை, துரையின் சகோதரி தாமரைச்செல்வி ஆகிய 4 பேர் மீதும், தகாத வார்த்தையில் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது, திருட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பெண் கவுன்சிலர் உள்பட அவர் குடும்பத்தினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT