காலணி வீசிய பாஜகவினர்
காலணி வீசிய பாஜகவினர் 
அரசியல்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு: பாஜகவினரின் செயலால் பரபரப்பு

காமதேனு

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணியை வீசியதால் மதுரை விமான நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் இன்று மதுரை விமான நிலையம் அருகே குவிந்தனர்.

அப்போது, இந்நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "அரசு நிகழ்ச்சி என்பதால் இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர்" என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அமைச்சர் பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்ற நிதி அமைச்சரின் காரின் மீது பாஜக தொண்டர்கள் காலணிகளை விட்டு எறிந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காலணி எறிந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்னர் அமைச்சரின் வாகனம் அங்கிருந்து சென்றது. தொடர்ந்து, அமைச்சரின் கார் மீது காலணி வீசியவர்கள் குறித்து காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT