தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை மனு அளிக்கும் பாஜக தலைவர்கள்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை மனு அளிக்கும் பாஜக தலைவர்கள்.  
அரசியல்

தமிழக ஆளுநரை பாஜக தலைவர்கள் சந்தித்ததின் பின்னணி என்ன?

கவிதா குமார்

தமிழக அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடுகிறார் என்று நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் அவரை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆளுநருக்கும், திமுகவிற்குமான மோதல் வலுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பில் என்ன நடந்தது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டதற்கு, " தமிழக அரசின் பிஜிஆர் எனர்ஜி மின்சார ஒப்பந்தத்தில் நடந்த ஊழல் மற்றும் அதற்கான ஆதாரங்களுடன் மனு அளித்தோம்" என்று கூறினார்.

நாராயணன் திருப்பதி

ஊழல் புகார் கொடுக்க மட்டும் தான் ஆளுநரை பாஜக மாநில தலைவர்கள் சந்தித்தீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, " தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீதிபதிகளுக்கும், பிரதமருக்கும் கொலைமிரட்டல் விடுத்து பொதுமக்கள் மத்தியில் சிலர் பேசுகிறார்கள். இதன் மூலம் மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கிறார்கள். நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை முதல்வர் ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பிய நாராயணன் திருப்பதி, " தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. எனவே, இதுகுறித்தும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார்.

தமிழக ஆளுநரை திமுக கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், பாஜக தலைவர்கள் அவரை சந்தித்ததின் நோக்கம் வேறு உள்ளதா? என்று அவரிடம் கேட்டதற்கு," தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் ஆர்.என்.ரவி தான் ஆளுநர். அதனால் தான் அவரைச் சந்தித்தோம். திமுக மீது நாங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT