அரசியல்

`உன்னால ஒன்றும் செய்ய முடியாது'- அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஒருமையில் பேசிய அண்ணாமலை

காமதேனு

தமிழுக்கு திமுக  முடிவுரை எழுதுவதாக குற்றம்சாட்டி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இன்று  கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.  அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை திமுக மற்றும்  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை  மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது, " திமுகவின் மொழி அரசியலைப் பார்க்கும் போது, அவர்கள் துவக்க காலத்தில் காங்கிரஸை ஒரம் கட்ட இந்தி எதிர்ப்பு என்ற முழக்கத்தை எடுத்தனர். அதற்கு முன்பாக ஆங்கிலத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரியாரும்  தமிழ் மொழியைக் காட்டிலும் ஆங்கிலத்துக்கு ஆதரவு கரம் நீட்டினார். 

ஏன் அவர் ஆங்கிலத்துக்கு ஆதரவு தெரிவித்தார் எனில்,  தமிழ் என்பது ஒரு தெய்வீக மொழி. தமிழ் மொழியில் தான் ஆண்டவன், இறைவன், இறையாண்மை, சனாதன தர்மம் அனைத்தும் கலந்திருக்கக் கூடிய ஒரே மொழி தமிழ். தமிழை ஊக்குவித்தால், தமிழ் மண்ணில் இறை நம்பிக்கையை ஊக்குவிக்க நேரிடும் என்பது அவர்களுக்கு தெரியும். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும், கடவுள் மறுப்பாளர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் தமிழை அழிக்கவேண்டும், அதற்கு மாற்றாக ஆங்கிலத்தை கொண்டு வரவேண்டும் என்பது தான் திமுகவின் ஆரம்பகால அரசியலில் புகுந்தினார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, திமுகவினர் இந்தி எப்போதும் வேண்டாம், ஆங்கிலம் எப்போதும் வேண்டும் என்பது தான் அவர்களது முழக்கமாக இருந்ததே தவிர தமிழ் வேண்டும் என அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. தெய்வீக மொழியான தமிழை அழிக்க ஆங்கிலத்தை கையிலெடுத்து அரசியல் செய்துவருகின்றனர். 

தமிழகத்தில் மொழி அழிப்புக்கு எதிராக திமுக செயல்படுவதைக் கண்டித்து பாஜக முதன்முதலாக போராட்டக் களம் இறங்கியுள்ளது. திமுக தமிழுக்கு தீங்கு செய்திருப்பதை விளக்கவே இந்த ஆர்ப்பாட்டம். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 48 ஆயிரம் மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பது ஆச்சரியம் என்பதைக் காட்டிலும், தமிழ் தமிழ் வளர்க்கிறோம் என கூறிவரும் திமுகவின் சதித்திட்டம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. 

கொள்ளையடிப்பவர்களின் கூடாரமாக கடலூர் மாறியிருக்கிறது. என்னை  கடலூருக்குள் விடமாட்டேன் என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடலூர் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?  இதோ கடலூருக்குள் வந்தாகி விட்டது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.  பாரதிய ஜனதா கட்சி உள்ளே வந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாளைக்கு எம்எல்ஏவாக இருப்பீர்கள்.  ஆண்டு அனுபவித்துவிட்டு ஓடிப் போய் விடுங்கள். அடுத்த தேர்தலில் மானமுள்ளவர்கள்,  ரோஷம் உள்ளவர்கள் இந்த தமிழ் மண்ணில் உள்ளவர்கள் உங்களை வீழ்த்தப் போவது உறுதி. டெபாசிட் கூட கிடைக்காமல் ஓடிப் போகப் போகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதேபோல பட்டியலின மக்களை  வியாபாரமாக வைத்து அரசியல் நடத்துகிறவனுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற நிலைமை விரைவில் தமிழகத்தில் வரும். விரைவில் தேர்தல் வரப்போகிறது.  பாரதிய ஜனதா கட்சியால் மட்டும்தான் எதையும் செய்ய முடியும் என்பதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பாரதிய ஜனதா கட்சியும் மோடியையும் கொண்டு சேர்த்திருக்கிறோம். 

கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. தமிழகத்தில் திமுகவின் மதம் மற்றும் ஜாதி அரசியல் இனி எடுபடாது. என்ஐஏ அமைப்புக்கு காவல் நிலைய அந்தஸ்து கொடுக்காததுதான் கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்திற்கு காரணம்"  என்று பேசினார்.

SCROLL FOR NEXT