சஞ்சீவ் மிஸ்ரா.
சஞ்சீவ் மிஸ்ரா. 
அரசியல்

முன்விரோதத்தில் பாஜக நிர்வாகி கொலை: 2-வது முறையாக ஸ்கெட்ச் போட்டு பழி தீர்த்த கும்பல்

காமதேனு

பிஹாரில் முன்விரோதத்தில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமூடி அணிந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம், கதிஹா் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் மிஸ்ரா(63). பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர் வீட்டின் அருகே நண்பர்களுடன் அவர் நேற்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், சஞ்சீவ் மிஸ்ராவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது தலை மற்றும் நெஞ்சில் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சஞ்சீவ் மிஸ்ரா உயிரிழந்தார். இச்செய்தியறிந்த பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் சாலைகளில் சென்ற வாகனங்களையும் மறித்து அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சஞ்சீவ் மிஸ்ரா உடல் போலீஸாரால் அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளியானது. முன்னாள் மாவட்ட கவுன்சிலராக இருந்த சஞ்சீவ் மிஸ்ராவிற்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. ஒருவருடத்திற்கு முன்பு சஞ்சீவ் மிஸ்ரா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த அவர், உயிர் பிழைத்தார். தற்போது அதே கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். இதையடுத்து கொலை குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர். பிஹாரில் பாஜக நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT