அரசியல்

சர்னா மதத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம்... பழங்குடியின அமைப்பு அழைப்பு!

காமதேனு

பழங்குடியினருக்கான சர்னா மதத்தினை அங்கீகரிக்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 30ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதிவாசி செங்கேல் அபியான் என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆதிவாசி செங்கேல் அபியான் அமைப்பின் தலைவர் சல்கான் முர்மு பேசியதாவது, "கோடிக்கணக்கான பழங்குடியின மக்களின் அடையாளமாக விளங்கும் சர்னா மதத்தினை அங்கீகரிக்க மறுப்பது என்பது அரசியலமைப்பு குற்றத்திற்கு நிகரானது. பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளுமே பழங்குடியின மக்களின் சமய சுதந்திரத்தை மறுக்கின்றன. மற்றவர்களின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு எங்களைக் கட்டாயப்படுத்துவது என்பது மத அடிப்படையிலான அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்துவதைப் போன்றதாகும்.

1951 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சர்னா மதத்திற்கு தனி அடையாளம் இருந்தது, காங்கிரஸ் அரசு பின்னர் அதை நீக்கிவிட்டது, தற்போது பாஜக அரசு பழங்குடியினரை வனவாசிகள் மற்றும் இந்துக்களாக மாற்ற முயற்சித்து வருகிறது.

சர்னா என்பது மலைகள், காடுகள் போன்ற இயற்கையை வழிபடும் பழங்குடியின மக்களின் மத நம்பிக்கையாகும். 2011ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 50 லட்சம் பழங்குடியின மக்கள் தங்கள் மதநம்பிக்கையை 'சர்னா' என்று குறிப்பிட்டுள்ளனர். இத்துடன் ஒப்பிடும்போது 44 லட்சம் பேர் மட்டுமே சமண மதத்தை குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் சமண மதத்திற்கு தனி மத அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது, ஆனால் சர்னா மதம் இன்றுவரை அதைப் பெற முடியவில்லை.

மேலும், பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த இடமான ஜார்க்கண்டில் உள்ள உலிஹாட்டுவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நவம்பர் மாதம் ஒடிசாவில் உள்ள பரிபாடாவுக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருவரும் சர்னா மதத்தை அங்கீகரிப்பது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

எனவே வேறு வழியில்லாததால், ஆதிவாசி செங்கேல் அபியான் அமைப்பு டிசம்பர் 30 அன்று பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள நிமித்தமான முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. போராட்டத்தின் ஒரு பகுதியாக சாலை மற்றும் ரயில் மறியலும் நடைபெறும்" என்று அவர் கூறினார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சர்னாவை ஒரு தனித்துவமான மதமாக அங்கீகரிப்பதற்கான தீர்மானத்தை ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நவம்பர் 2020ல் ஒருமனதாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT