அரசியல்

மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை: பிரதமர் வருகையையொட்டி 1500 போலீஸார் குவிப்பு

காமதேனு

பிரதமர் வருகை தருவதையொட்டி மதுரை விமான நிலையம் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க காவல் துறை தடைவிதித்துள்ளது. மதுரை விமான நிலையத்தைச் சுற்றி மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நாளை(நவ.11) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பிரதமர் மோடி கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளார். இந்த நிகழ்விற்காக பெங்களூரிலிருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி மதுரை வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காந்திகிராமம் செல்கிறார். இதற்காக, மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகைக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நான்கு துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகர் விமான நிலையம் பாதுகாப்பு மண்டலமாக உள்ளதால் ட்ரோன் கேமிராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் முழுசோதனைக்குப்பின்பே அனுமதிக்கப்படும். எனவே, பயணிகள் காலதாமதமின்றி சற்று முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் தேவையற்ற நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு மதுரை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT