எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் 
அரசியல்

அதிமுக கூட்டணியில் தமாகா? எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஜி.கே.வாசன்!

காமதேனு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதனால் அதிமுக கூட்டணியில் தமாகா இடம் பெறப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாகியுள்ளன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும்  கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

ஜி.கே.வாசன்

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று இரவு சந்தித்து பேசியுள்ளார்.  சுமார் அரை மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சந்திப்பில் மக்களவைத் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அக்கட்சிக்கு தஞ்சைத் தொகுதியை அதிமுக ஒதுக்கியிருந்தது. ஆனாலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என கடந்த நவம்பர் மாதம் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார் என்றாலும் கூட அவர் மத்தியில் ஆளும் பாஜகவுடன் மிக அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கான ஆதரவுக் கருத்துகளை  ஓங்கி ஒலித்து வருகிறார். சமீபத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை ஜி.கே வாசன் விமான நிலையத்தில் சென்று வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் திடீரென  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மீண்டும் பாஜக கூட்டணியில் இணையும் என்று தொடர்ந்து கூறிவரும் ஜி.கே.வாசன் அதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தாரா என்பதும்,  பாஜக கூட்டணியில் இணைய அவர் எடப்பாடி பழனிசாமிக்கு  அழைப்பு விடுத்தாரா என்பதும் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. 

அதிமுக,  தமிழ்நாட்டில் உள்ள பிற கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் எடப்பாடியாரை சந்தித்துள்ள வாசன் அவரும் அதிமுக கூட்டணியில் இணைவதற்காக முயற்சிக்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. 

SCROLL FOR NEXT