அரசியல்

'தற்காலிக ஆசிரியர்கள் பணி என்பது அப்பட்டமான உழைப்புச் சுரண்டல்': சீமான் காட்டம்

காமதேனு

அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப 13,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின் மூலம் நிரப்பத் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக இளைஞர்களின் அரசுப்பணி கனவினை கானல் நீராக்கும் திமுக அரசின் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், “தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் வெறும் 7500 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்பும் தமிழக அரசின் அறிவிப்பு அப்பட்டமான உழைப்புச் சுரண்டல். அரசுப் பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியத்திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்லித்தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக அரசின் பச்சைத் துரோகத்தால் ஆசிரியர்களது ஓய்வூதிய பலன் என்பது மிகச் சொற்பமாகக் குறைந்துபோனது. இந்த நிலையில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் சூழல் ஏற்படும்.

ஏற்கனவே தமிழ்நாட்டின் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களில் ஏறத்தாழ சரிபாதி அளவிற்கு எவ்வித அடிப்படை உரிமைகளும், பணப்பலனுமின்றி தற்காலிக பணியாளர்களைக் கொண்டு இயங்கும் அவலநிலை உள்ளது. இந்த நிலையில் மேலும் பல ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் பணிநியமனம் என்பது பள்ளிக் கல்வித்துறையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே தற்காலிக ஆசிரியர் நியமனத்தால் எதிர்காலத்தில் பணி நிரந்தர போராட்டங்களுக்கு வழிவகுப்பதோடு, ஆசிரியர்களது மன உளைச்சலுக்கும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படவும் முக்கியக் காரணமாகவும் அமையும்” என தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT