பல்லடத்தில் அண்ணாமலை நடைபயணம் 
அரசியல்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக் கடைகளைத் திறப்போம்... அண்ணாமலை அறிவிப்பு!

காமதேனு

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள 'என் மண் என் மக்கள்' யாத்திரை பல்லடத்தில் நேற்று நடந்தது. பல்லடம் - மங்கலம் சாலையில் தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகளில் கட்சித் தொண்டர்களோடு வலம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது , "பல்லடம் பகுதியில் 3 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. நாளொன்றுக்கு 10 லட்சம் பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 80 ஆயிரம் விசைத்தறிகள் இந்த பகுதியில் உள்ளன. ஆனால் இன்றைக்கு பீக் ஹவர்ஸ் கட்டணம், நிலைக்கட்டணம் தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ளது.

இதற்கு எதிராக தொழில்துறையினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மக்களின் குறைகளை திமுக அரசு காது கொடுத்து கேட்பதில்லை. கொங்கு பகுதி வளர மத்திய அரசு தனிக்கவனம் செலுத்துகிறது. ஆனால், மாநில அரசு அப்படி நினைக்கவில்லை. 

அண்ணாமலை

மின் கட்டண உயர்வுக்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி தான். இன்றைக்கு அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிரிமினல் குற்றவாளியை மாநில அரசு அமைச்சராக வைத்துள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னபடி, டாலர் சிட்டியை டல் சிட்டியாக நாங்கள் மாற்றவில்லை. 

2024-ம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவு பாஜகவுக்கு இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் 39 இடங்களை பிடிக்கும். பெரிய பெரிய முதலாளிகளுக்காக மதுபான ஆலைகள் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. நாங்கள் கள்ளுக்கடைகளைத் திறந்து, விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவோம். தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை எதிர்க்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே" என்று பேசினார்.

SCROLL FOR NEXT