நடை பயணத்தில் அன்புமணி
நடை பயணத்தில் அன்புமணி  
அரசியல்

என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும்: நடைபயணம் தொடங்கினார் அன்புமணி

காமதேனு

விவசாயிகளிடமிருந்து நிலமெடுக்கும் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி இரண்டு நாள் நடைபயணம் தொடங்கினார். 

கடலூர் மாவட்ட மக்கள் வழங்கிய நிலங்களையும், அதிலிருந்து கிடைத்த வளங்களையும் ஆதாரமாகக் கொண்டு  உருவான நெய்வேலி என்எல்சி நிறுவனம்  மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உருவெடுத்துவிட்டது. என்றாலும்  பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது அடுத்த கட்டமாக 40 கிராமங்களில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் என்எல்சி நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. 

அந்த முயற்சி வெற்றி பெற்றால் கடலூர் மாவட்ட மக்கள் சொந்த மண்ணில் அகதிகளாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே மக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட்டு என்எல்சி நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் நடைபெறும் அறிவித்திருந்தார்.

அதன்படி நெய்வேலி அருகே வானதிராயபுரம் என்ற இடத்தில் இன்று  பொதுக்கூட்டம் நடத்தி அதில் என்எல்சி நிறுவனத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள  பாதிப்புகள் குறித்து விளக்கிய அன்புமணி, தனது நடை பயணத்தின் நோக்கம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து  என்.எல்.சி-க்கு எதிரான தனது நடை பயணத்தை அந்த கிராமத்திலிருந்து தொடங்கினார். இன்று தொடங்கும் பயணம்  வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி உள்ளிட்ட ஊர்கள் வழியாக  சென்று கரிவெட்டியில் நாளை முடிவடைகிறது.

என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தகூடாது, சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள்  முன்வைத்து இந்த நடைபயணம் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT