அம்மா மினி கிளினிக்  
அரசியல்

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

காமதேனு

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க முடியாது என்று மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக அரசால் தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்  தொடங்கப்பட்டது. சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்கள், தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள அம்மா மினி கிளினிக்குக்கு சென்று மருத்துவ உதவி பெற்று வந்தனர். கொரோனா காலத்தில் அங்குள்ள மருத்துவர்கள் தங்கள் உயிரைப்பணயமாக வைத்து கொரோனாவுக்கும், மற்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் திமுக அரசு வந்தபிறகு இந்த திட்டத்தை தொடரவில்லை. அதற்குப் பதிலாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.  சர்க்கரை,  ரத்த அழுத்தம் உள்ளிட்ட அளவுகளை பரிசோதித்து அதற்குரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் மூலம் அளித்து வருகின்றனர்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அந்தத் திட்டம் தொடரப்படாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "அது ஓராண்டு திட்டம் தான். அதனால் அதனை மீண்டும் தொடர வாய்ப்பில்லை.  அதற்கு மாற்றாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. அது சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடர்வதற்கான தேவையும் ஏற்படவில்லை" என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT