அரசியல்

பரஸ்பரம் பாராட்டும் அமித்ஷா-மாயாவதி: பாஜகவிற்கு ஆதரவு பெறும் முயற்சியா?

ஆர். ஷபிமுன்னா

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஒருவருக்கு ஒருவர் தட்டிக்கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் கருத்து கூறியுள்ளனர். இது அம்மாநில தேர்தல் முடிவுகளில் தொங்குசபை வந்தால் பாஜகவிற்காக ஆதரவு பெறும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 10ல் துவங்கி உபி சட்டப்பேரவைக்கு ஏழுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நான்காவது கட்ட வக்குப்பதிவு இன்று தொடர்கிறது. இதற்கான பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தொலைக்காட்சி ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிஎஸ்பிக்கு உபியில் இருந்த அரசியல் செல்வாக்கு முடிந்ததா? என ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷா, "பிஎஸ்பிக்கான அரசியல் ஆதரவு உபியில் இன்னும் முடிவிற்கு வரவில்லை. பட்டியலின சமூகத்தின் ஜாட்டவ் பிரிவு மற்றும் கணிசமான முஸ்லீம் வாக்குகளும் பிஎஸ்பிக்கு உள்ளது. அவரது பிரச்சாரத்தில் தீவிரம் குறைந்ததை வைத்து உபியில் செல்வாக்கு இல்லை எனக் கூறி விட முடியாது" எனப் பதிலளித்தார்.

இந்நிலையில், இன்று லக்னோவில் வாக்குப்பதிவு செய்ய வந்த பிஎஸ்பி தலைவர் மாயாவதியிடம், அமித்ஷாவின் பதில் மீதானக் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷாவை பாராட்டும் வகையில் பதிலளித்திருந்தார். இதன்மூலம், இந்த இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக் கொண்டு அதில் கிடைக்கும் நட்பின் பலனை, தேர்தல் முடிவுகளுக்கு பின் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிஎஸ்பியில் தலைவர் மாயாவதி கூறும்போது, ‘எங்கள் கட்சி மீதான உண்மையை அவர் ஒப்புக்கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இதற்காக நான் அமித்ஷாஜிக்கு பிஎஸ்பி சார்பில் நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். பட்டிலின மக்கள், முஸ்லீம்கள் மட்டுமின்றி இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட வாக்குப்பதிவுகளில் உயர்சமூகம் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது என்பதையும் அவருக்கு கூற விரும்புகிறேன். எனவே, உபியின் 403 இல் பிஎஸ்பிக்கு 300 தொகுதிகள் கிடைக்கும்’ எனத் தெரிவித்தார்.

உபியில் மீண்டும் தன் ஆட்சியை தொடர பாஜக அதிக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், சமாஜ்வாதிக்கு அதிகரித்து விட்ட ஆதரவு பாஜகவின் வெற்றிக்கு சவாலாகிவிட்டது. இவர்களுக்கு இடையே, பிஎஸ்பி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் கணிசமான வாக்குகளை இந்தமுறை பிரிப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இதனால், ஒருவேளை தொங்குசபை வந்தால் பிஎஸ்பியின் ஆதரவை பெற பாஜக தயாராகி வருவது தெரிகிறது.

பிஎஸ்பியின் கூட்டணி வரலாறு

பாஜகவிற்கு உபியில் ஆட்சி அமைக்க பிஎஸ்பி ஏற்கெனவே ஆதரவளித்துள்ளது. அதேபோல், சமாஜ்வாதிக்கும் ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தது. ஆனால், பாஜகவுடன் இருந்த அளவிற்கு சுமுக உறவு இன்றி சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங்கிற்கு அளித்த ஆதரவை மாயாவதி முழுமையாகத் தொடரவில்லை. இதனால், எதிர்காலத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவளிக்கும் நிலை வந்தால் சமாஜ்வாதியை தவிர்த்து மாயாவதி, பாஜகவை தேர்வு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் சமாஜ்வாதியுடன் உருவான பிஎஸ்பியின் கூட்டணி தொடராமல் போனதும் நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT