அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி 
அரசியல்

பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை கட்டாயம் தடம் புரளும் -அகிலேஷ் யாதவ் ஆருடம்

எஸ்.எஸ்.லெனின்

பாஜகவின் பெருமைக்குரிய டபுள் இஞ்சின் இந்த மக்களவைத் தேர்தலில் கட்டாயம் தடம் புரளும் என கணித்திருக்கிறார் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.

அதிக எண்ணிக்கையில் மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலம், மத்தியில் அமையும் ஆட்சியையும், அதன் பிரதமரையும் தேர்வு செய்வதில் தனி வரலாறு கொண்டது. உத்தரபிரதேசத்தில் வெல்லும் கட்சியே மத்தியில் ஆட்சியை அமைக்கும் என்பதே, எழுதப்படாத விதியாக பெரும்பாலும் அமைந்துள்ளது. அதே நம்பிக்கையுடன் இந்த மக்களவைத் தேர்தலிலும், உபியில் பாஜக வலம் வருகிறது.

யோகி - மோடி

யோகி ஆதித்யநாத் தலைமையிலான இரண்டாவது உபி ஆட்சி, மத்தியில் மூன்றாவது மோடி ஆட்சிக்கு உதவும் என்று பாஜக நம்புகிறது. வட இந்தியாவில் பாஜகவின் இந்தி இதய மாநிலங்களின் வரிசையில் உ.பி-க்கு பிரதான இடமுண்டு. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட துடைத்தெறியப்பட்டது. இதர எதிர்க்கட்சிகளும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் இம்முறை அந்த காட்சிகளில் நிறைய மாறியுள்ளன.

பிரதான எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியின் பெயரில் ஒன்றாக களமிறங்கி உள்ளன. கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி மீண்டும் உபியின் அமேதி தொகுதி பக்கம் திரும்ப மாட்டார் என பாஜக எதிர்பார்த்திருந்தது. ஆனால் அவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் களமிறங்கி இருக்கிறார். இதனால் உபி காங்கிரஸார் உற்சாகம் கொண்டிருக்கின்றனர். உபியில் போட்டியிடாத ஆம் ஆத்மி தனது தார்மிக ஆதரைவை இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறது.

பிரதமர் மோடியால் இளவரசர்கள் என கிண்டலுக்கு ஆளாகும் ராகுல் காந்தி - அகிலேஷ் யாதவ் ஆகியோர்கள் இம்முறை, உபியில் பாஜகவின் கனவைக் கலைக்கும் என்று இந்தியா கூட்டணி நம்புகிறது. இதையே “இந்த இளவரசர்கள் பாஜகவின் ஆட்சிக்கு செக்மேட் வைத்திருக்கிறோம்” என்று சவால் விட்டிருக்கிறார் அகிலேஷ் யாதவ். பிரதாப்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை தடம் புரளும் என்றும் கணித்திருக்கிறார்.

ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவ்.

”பாஜக 400 இடங்களைத் தாண்டும் என்ற முழக்கத்தை எழுப்புகிறது. ஆனால் பாஜகவுக்கு எதிரான 140 கோடி மக்களின் கோபத்தை பார்த்தால், அக்கட்சி 140 இடங்களைக் கூட கைப்பற்ற போராட வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது. பாஜக தலைவர்களால் பரிகாசத்துக்கு ஆளாகும் ’பட்டத்து இளவரசர்கள்’ இம்முறை பாஜகவுக்கு செக் அன்ட் மேட் கொடுப்பார்கள். நாட்டை விட்டு ஓடிய சில தொழிலதிபர்களின் வரிசையில், டெல்லியில் உள்ள சில தலைவர்கள் தப்பியோட ஏதுவாக தங்கள் லக்கேஜை தயார் செய்து வைத்திருக்கிறார்கள்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT