அரசியல்

எம்பி பதவியை துறந்தார்: அகிலேஷின் அடுத்த பிளான் என்ன?

ஆர். ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வென்ற பாஜக, பதவியேற்புக்கு தயாராகி வருகிறது. அதேசமயம், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் திட்டம் என்ன என்பது வெளியாகாமல் இருந்தது. ஏனெனில், உபியின் ஆஸம்கர் மக்களவை தொகுதி எம்பியான அவர், மெயின்புரியின் கர்ஹால் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார். இந்த இரண்டில் அவர் எதை தேர்வு செய்வார் என்பது ரகசியமாகவே இருந்தது. இந்த சஸ்பென்ஸில் அவர் எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துவிட்டார்.

தேர்தல் ஆணைய விதிப்படி ஒருவர், எம்பி அல்லது எம்எல்ஏவாக ஒரே சமயத்தில் வகிக்க முடியாது. இதனால், அகிலேஷும், ஆஸம்கானும் இரண்டில் ஒரு பதவியை ராஜினாமா செய்யவேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த அகிலேஷ், தனது ராஜினாமா கடிதத்தையும், சிறையில் இருக்கும் எம்பி ஆஸ்ம்கானின் ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். அப்போது, அகிலேஷின் சித்தப்பாவும் மாநிலங்களவையின் சமாஜ்வாதி கட்சி தலைவருமான ராம் கோபால் யாதவும் உடனிருந்தனர். இந்த இரண்டு ராஜினாமா கடிதங்களையும் சபாநாயகர் ஓம் பிர்லாவால் பரிசீலனை செய்து, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார். அதன் பிறகு தேர்தல் ஆணையம் சார்பில் சம்பந்தப்பட்ட 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்.

சமாஜ்வாதி கட்சி நிறுவியவர்களில் ஒருவரான ஆஸம்கான், ராம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது ராம்பூர் எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். பல்வேறு வழக்குகளில் சிக்கி கடந்த இரண்டு வருடங்களாக சிறையில் இருக்கும் ஆஸம்கானுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால், சிறையிலிருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் ஆஸம்கான்.

சமாஜ்வாதியின் இந்த இரண்டு முக்கிய தலைவர்களும் ஒரே மாதிரியாக எடுத்த முடிவிற்கு காரணம் அடுத்து 2024-ல் வரவிருக்கும் மக்களவை தேர்தல் எனக் கருதப்படுகிறது. இந்த முடிவையும் சமாஜ்வாதியின் நிறுவனரும் தனது தந்தையுமான முலாயம்சிங்கின் அறிவுரையின் பேரில் எடுத்ததாக அகிலேஷ் கூறியுள்ளார். இவரை தொடர்ந்தபடி ஆஸம்கானும் தனது எம்பி பதவி ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.

அடுத்த 6 மாதத்திற்குள் ராம்பூர், ஆஸம்கர் மக்களவை தொகுதிக்கு இடைதேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டுமே முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதிகள் ஆகும். இரண்டு பேர் ராஜினாமா செய்துவிட்டதால் சமாஜ்வாதிக்கு மக்களவையில் எம்பிக்களின் பலம் மூன்றாக குறைந்துவிட்டது. முலாயம்சிங், எஸ்.டி.ஹசன், ஷபிக்கூர் புர்க் ஆகியோர் மட்டுமே எம்பிக்களாக உள்ளனர். மக்களவை இடைதேர்தலில் ஆஸம்கரில் அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவும், ராம்பூரில் ஆஸம்கானின் குடும்பத்தினரும் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.

உபி சட்டப்பேரவைத் தேர்தலில் 403-க்கு 275 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது பாஜக. முக்கிய எதிர்க் கட்சியான சமாஜ்வாதிக்கு 117 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் இரண்டிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. மாயாவதி கட்சியை ஆதரித்துவந்த ஜாதவ் சமூகத்தினர், இம்முறை பாஜகவுக்கு வாக்களித்ததும் முஸ்லிம் வாக்குகள் அந்த சமுதாயத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களால் பிரிக்கப்பட்டதும் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகின.

SCROLL FOR NEXT