எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் பணிமனையில் பாஜக தலைவர்கள் படங்கள் இல்லை!
அரசியல்

ஈரோடு அதிமுக தேர்தல் பணிமனை: பேனரில் பாஜக தலைவர்கள் படம் புறக்கணிப்பு

காமதேனு

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் பணிமனை தலைமை தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் பாஜக தலைவர்களின் படங்கள் இடம் பெறவில்லை, அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் மற்றத் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில், இன்று வேட்பாளரை அறிவித்த கையோடு தேர்தல் பணிமனையில் பதாகையும் வைத்துள்ளது அதிமுக.

இந்தப் பதாகையில் பாஜக தலைவர்களின் படங்கள் இடம்பெறவில்லை. அதேநேரம், அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்னும் பெயரிலேயே இந்த பதாகை வைக்கப்பட்டிருந்தாலும் அதில் பாஜக தலைவர்களின் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

இதில் காயிதே மில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தலைவர். காமராஜர், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.உ.சி, ராஜாஜி, நாராயணசாமி நாயுடு, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் படங்களும் இடம்பெற்றுள்ளன.

கூட்டணியில் பிரதான அங்கம் வகிக்கும் பாஜக தலைவர்களின் படம் அதிமுக தேர்தல் பணிமனை பதாகையில் இல்லாமல் இருப்பது அதிமுக - பாஜக இடையேயான பனிப்போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதையே உணர்த்துகிறது.

SCROLL FOR NEXT