அரசியல்

பாஜகவில் இணைந்த அதிமுக பிரபலம்: வரவேற்ற அண்ணாமலை!

காமதேனு

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். பாஜகவில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படுமா என்னும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அதிமுக சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் கே,ஆர்.எம் ராதாகிருஷ்ணன். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 63 ஆயிரத்து 11 வாக்குகள் பெற்றார். இருந்தும் திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார். அனிதா, இப்போது மீன் வளத்துறை அமைச்சராக உள்ளார்.

கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்தார். தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் மாற்றுக்கட்சியில் சேரும் முடிவில் இருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கூடவே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த முன்னோடிகளிடமும் வாழ்த்துப் பெற்றார்.

திருச்செந்தூர் சட்டசபையில் வலுவான செல்வாக்கு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்தத் தொகுதியில் அனிதாவே வென்று வருகிறார். அவரை எதிர்கொள்ளும்வகையில் பாஜகவில் வலுவான பதவியைப் பெற வியூகம் வகுத்து வருகிறார் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஏற்கனவே அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் இதேமாவட்டத்தில் இருப்பதால் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது போக, போகத்தான் தெரியும்.

SCROLL FOR NEXT