அரசியல்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் இன்று முதல் வரலாம் - போலீஸ் குவிப்பு!

காமதேனு

சென்னை உயர்நீதிமன்றத்தின் கெடு முடிவடைந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். மேலும் அப்பகுதியிலிருந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் வருவாய்த் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்கில் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், வன்முறை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஜூலை 21 முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் நேற்றுடன் நீதிமன்றக் காலக்கெடு முடிவடைந்தது. இந்நிலையில் இன்று முதல் தொண்டர்கள் அதிமுக அலுவலகத்திற்குச் செல்ல இருக்கிறார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்திற்கு வருவார்கள் என்பதால், அங்கு மீண்டும் மோதல் ஏற்படலாம் என்பதால் இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 35 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT