அரசியல்

ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு... நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை: அதிமுக பொதுக்குழு நடத்த தடை வருமா?

காமதேனு

பொதுக்குழுவில் கலந்து கொள்ள வருமாறு ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழுவிற்கு தடை விதிக்க ஓபிஎஸ் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை ஸ்ரீவாரு மண்டபத்தில், கடந்த 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஒற்றைத் தலைமை களேபரங்களால் முடிவுற்றது. ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அந்த மேடையிலேயே தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பொதுக்குழு நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் பொதுக்குழுவில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக சார்பில் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பிய அழைப்பிதழைத் தேனி, பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டிலிருந்தவர்களால் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் வரும் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்குத் தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வரவுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதத்தைக் கட்சியில் விதிப்படி 15 நாள்களுக்கு முன் அனுப்ப வேண்டும். ஆனால் நேற்று மாலைதான் எனக்குக் கடிதம் வந்தது. அதிமுக சட்ட விதிகளுக்கு முரணாக பொதுக் குழு நடைபெறுகிறது. தனக்கு உரிய முறையில் கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவசர வழக்காகக் கருதி மனுவை விசாரிக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை அடுத்து நாளை இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெறும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார். பொருளாளர் என்ற முறையில் பொதுக்குழுவில் கலந்து கொண்டு வரவு செலவு கணக்குகளை அவர் தாக்கல் செய்ய வேண்டும். பொதுக்குழுவிற்கு நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அதில் ஓபிஎஸ் கலந்து கொள்வாரா என்ற குழப்பம் தொண்டர்களிடையே இருந்து வருகிறது.

SCROLL FOR NEXT