அரசியல்

ரூ.58.23 கோடி சொத்துக்குவிப்பு: எஸ்.பி.வேலுமணியிடம் துருவிதுருவி கேள்வி

காமதேனு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.58.23 கோடி சொத்துக்குவிப்பு பற்றி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் துருவிதுருவி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 60 இடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, மாநகராட்சி தொடர்புடைய அலுவல்பூர்வ ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்.பி.வேலுமணியின் வீடு

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மைல்கல் பகுதியில் அமைந்துள்ள வேலுமணி வீடு உள்ப 41 இடங்களிலும் மற்றும் சேலம் உள்பட மாநிலம் முழுவதும் 58 இடங்களில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூரில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

ரூ.58.23 கோடி சொத்துக்குவிப்பு தொடர்பாக வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் துருவிதுருவி கேள்வி எழுப்பி வருகின்றனர். டெண்டர்களை தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதாக கடந்த முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனையையொட்டி அதிமுகவினர் அங்கு குவிந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT