மேயர் ஆர்யா ராஜேந்திரன்
மேயர் ஆர்யா ராஜேந்திரன் 
அரசியல்

மேயர் ஆர்யா ராஜேந்திரன் பெயரில் வெளியான சர்ச்சை கடிதம்: வழக்குப்பதிந்து போலீஸ் விசாரணை

காமதேனு

மேயர் ஆர்யா ராஜேந்திரன் மாநகராட்சியில் பணியாளர்கள் நியமிப்பது தொடர்பாக கடிதம் எழுதியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளத்தில் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வசம் உள்ளது. இங்கு இந்தியாவிலேயே மிக இளைய வயதில் மேயரான ஆர்யா ராஜேந்திரன் மேயராக உள்ளார். மாநகராட்சி தினக்கூலி அடிப்படையில் சுகாதாரத்துறையில் பல்வேறு பணிகளுக்கு மொத்தமாக 295 நபர்களை பணி அமர்த்துவதாக அறிவித்துள்ளது. ஒருபக்கம் பொதுவெளியில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, இதற்கு ஆள்களைத் தெரிவு செய்து பெயர் பட்டியல் தருமாறு திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு, மேயர் ஆர்யா ராஜேந்திரன் எழுதியதாக ஒரு கடிதம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், “மாநகராட்சி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு ஆள்கள் எடுக்க முடிவுசெய்துள்ளது. ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். முன்னுரிமைப் பட்டியலை வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.”எனக் கூறப்பட்டிருந்தது. இதையே முன்வைத்து இளைஞர் காங்கிரஸார், விதிமீறலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மேயர் ஆர்யா ராஜேந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பி வந்தனர். ஆனால் கேரள இடதுசாரி அரசும், மேயர் ஆர்யா ராஜேந்திரனும் அது போலியானக் கடிதம் எனக் கூறிவந்தனர். ஆனால், அது போலி என்றால் அது குறித்து வழக்குப்பதிந்து உரிய உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதில் என்ன தயக்கம் என எதிர்கட்சிகள் விடாது இந்த பிரச்சினையை எழுப்பி வந்தன.

இந்நிலையில் கேரள போலீஸார், மேயர் ஆர்யா ராஜேந்திரன் எழுதியதாக அவர் பெயரில் போலி கடிதம் சுற்றுவதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் யாருடைய பெயரும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கு கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT