பிரதமர் மோடி
பிரதமர் மோடி குஜராத்திலேயே பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள்: 8 பேரை அதிரடியாக கைது செய்தது காவல்துறை
அரசியல்

குஜராத்திலேயே பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள்: 8 பேரை அதிரடியாக கைது செய்தது காவல்துறை

காமதேனு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் பல்வேறு பகுதிகளில் "மோடி ஹடாவோ, தேஷ் பச்சாவோ (மோடியை அகற்று, நாட்டைக் காப்பாற்று) " போஸ்டர்களை ஒட்டியதற்காக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் நேற்று போஸ்டர் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், இன்று இந்த கைதுகள் நடந்துள்ளன. இதுகுறித்து அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம் ஆத்மியின் "மோடி ஹடாவோ, தேஷ் பச்சாவோ" பிரச்சாரம் நாடு முழுவதும் 11 மொழிகளில் நேற்று தொடங்கப்பட்டது. ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது தவிர குஜராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி, ஒரியா, கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளிலும் இதற்கான போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த வாரம், பிரதமரைக் குறிவைத்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் டெல்லியில் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அச்சக உரிமையாளர்கள் ஆவார்கள். பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததற்காகவும், சட்டத்தின்படி அச்சிடப்பட்ட அச்சகத்தின் பெயரைச் சுவரொட்டிகளில் குறிப்பிடாததற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

கைது குறித்து பேசிய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், "சுதந்திரத்திற்கு முன்பு கூட, சுதந்திர போராட்ட வீரர்கள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள், அவர்கள் மீதுகூட வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பகத் சிங் பல சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார், அவர் மீது ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT