அண்ணாமலை
அண்ணாமலை 
அரசியல்

620 கோடி அளவுக்கு என் மீது வழக்கு - புள்ளிவிவரம் சொன்ன அண்ணாமலை!

காமதேனு

தமிழகத்தில் தன் மீது 620 கோடி ரூபாய் அளவுக்கு இதுவரை வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினிகணேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், தமிழக அரசு மீது பாஜக வைத்த குற்றச்சாட்டிலிருந்து பின் வாங்கவில்லை. இன்னும் ஒரு படி முன்னால்தான் போகிறோம். ஆவின் நிறுவனத்திடம் பொருள்கள் இல்லை. ஆவின் நிறுவனம் பரிசீலனை செய்யவில்லை. ஆவின் நிறுவனம் பங்கேற்கவில்லை என்று தற்போது கூறுகின்றனர்.

நாங்கள் கொடுத்துள்ள ஆவணத்தில் ஆவின் நிறுவனம் மார்ச் 15-் தேதி கூட்டத்துக்கு வந்தனர். திட்டக் குழுத் துணைத் தலைவர் ஆவின் நிறுவனத்தின் பொருளை ஏற்றுக் கொண்டு மார்ச் 31 -ம் தேதி கூட்ட நிரலில் ஊட்டச்சத்து தொகுப்பை திருத்தி பி.எல். ஹெல்த் மிக்ஸூக்குப் பதிலாக ஆவின் பெயரை போட்டு அனுப்பினர். இது தொழில்நுட்ப விஷயம்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தொழில்நுட்ப வல்லுநர் கிடையாது. அரசியல்வாதி. தமிழக மக்களைத் திசை திருப்புகிற அமைச்சர்தான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக வெளியிட்ட ஆவணத்துக்குப் பதில் அளிக்க வேண்டும். மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் ஆவின் ஹெல்த் மிக்சை அரசுக்கு மார்ச் 31 -ம் தேதி பரிந்துரை செய்தார். எட்டு நாள்கள் கழித்து, தொழில்நுட்பக் குழு அனுப்பிய ஊட்டச்சத்து தொகுப்பைத் திரும்பப் பெற்று ஆவினுக்கு கொடுக்கக் கூடாது என்றும், பி.எல். ஹெல்த் மிக்சுக்குதான் கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

பி.எல். ஹெல்த் மிக்ஸ் ஏகபோகத்துடன் இந்த ஒப்பந்தப் புள்ளியை எடுத்துள்ளது. ஆவின் ஹெல்த் மிக்சுக்கு ஏன் கொடுக்கவில்லை? இதுதொடர்பாக அமைச்சர்கள் நாசரும், சுப்பிரமணியனும் எதற்காக முரண்பட்ட அறிக்கையைக் கொடுக்க வேண்டும்? இதைத் தெளிவுபடுத்த வேண்டியது அமைச்சரின் கடமை என்று கூறினார்.

மேலும், " என் மீது நிறைய வழக்கு தொடரப்பட்டு வருகிறது. மின்சாரத் துறை அமைச்சர் ரூ. 10 கோடிக்கு என் மீது 14-ம் தேதி வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுவரை ரூ. 620 கோடி அளவுக்கு என் மீது தமிழ்நாட்டில் வழக்குகள் உள்ளன. அடுத்ததாக சுகாதாரத் துறை அமைச்சர் என் மீது வழக்குத் தொடுத்தாலும் பயப்படமாட்டேன். யார் வழக்குத் தொடுத்தாலும், மிரட்டினாலும், பாஜக செய்யக்கூடிய பணியிலிருந்து பின் வாங்காது.

நான் ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளேன். அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளோம். தொழில்நுட்பக்குழு ஆவின் பெயரை பரிந்துரை செய்தனரா, இல்லையா என்பதற்கு பதில் அளிக்க வேண்டும். நாங்களும் ஆவணங்களைக் கையில் வைத்துதான் பேசுகிறோம். அமைச்சர் இன்னும் நிறைய பேச வேண்டும். அவருடைய வாயிலிருந்து நிறைய ஆதாரங்கள் வெளிவர வேண்டும். அதை வைத்து பாஜகவின் ஆவணங்கள் நிறைய வரப்போகிறது. அதிலிருந்து அமைச்சர் தப்பிக்க முடியாது" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT