அரசியல்

5 ஜி ஏலத்தில் முறைகேடு; ரூ 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது: ஆ.ராசா பரபரப்பு புகார்

காமதேனு

ரூ.5 லட்சம் கோடிக்கும் சென்றிருக்கவேண்டிய 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1.5 லட்சம் கோடிக்குத்தான் சென்றுள்ளது. எனவே 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசுகையில், “ 5 லட்சம் கோடி ரூபாய்க்கு 5 ஜி அலைக்கற்றை ஏலம் போயிருக்க வேண்டும். ஆனால் 1.5 லட்சம்கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போயுள்ளது. திட்டமிடுதலில் மோசமா அல்லது 4 கம்பெனிகளுடன் ஒன்றிய அரசு சேர்ந்து கூட்டுசதி செய்து விட்டதா என்பதை விசாரிக்க வேண்டும். 5 இலட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என நான் சொல்லவில்லை, மத்திய அரசாங்கமே சொல்லியது. ஆனால் இப்போது 1.5 கோடி ரூபாய்க்கு மட்டுமே போயுள்ளது ஏன். மீதமுள்ள பணம் எங்கே சென்றது என ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து அமைச்சர் சரியாக விளக்கம் அளிக்கவில்லை. எங்கே தவறு நடந்தது.

காங்கிரஸ் ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக 2 ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்ததாகக்கூறி அப்போது தனிமனிதன் வினோத் ராய் என்பவர் அரசின் ஏஜென்சியை பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டினார் என்று எனது புத்தகத்திலேயே குறிப்பிட்டுள்ளேன். இதற்கு இதுவரை வினோத் ராய் பதில் சொல்லவே இல்லை” என தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT