குற்ற வழக்குகள்
குற்ற வழக்குகள் 
அரசியல்

அதிர்ச்சி... 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,198 வேட்பாளர்களில் 417 பேர் மீது குற்ற வழக்குகள்!

காமதேனு

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,198 வேட்பாளர்களில் 417 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 87 தொகுதிகளில் 1,198வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 417 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

மக்களவைத் தேர்தல்

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ள தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஆர் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை 12 மாநிலங்களில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1198 வேட்பாளர்களில் 1192 பேரின் சுய உறுதிமொழிகளை ஆய்வு செய்துள்ளன. அந்த தகவலின்படி, மொத்தம் 417 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 167 வேட்பாளர்கள் தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

வழக்குகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பெற்றவர்கள் 32 வேட்பாளர்கள். பெண்களுக்கு எதிரான குற்றம் இழைத்த வேட்பாளர்கள் 25 பேர். கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய வேட்பாளர்கள் 24 பேர். வெறுப்பு பேச்சு வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் 21 பேர். கொலை வழக்கு தொடர்புடைய வேட்பாளர்கள் 3 பேர்.

இந்தியாவில் தேசிய கட்சிகள்

இந்தத் தேர்தலில் முக்கிய தேசிய மற்றும் மாநில கட்சிகளில் (பகுஜன் சமாஜ் கட்சி தவிர) அனைத்துக் கட்சிகளிலும் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி 51 சதவீதமும், பாஜக 45 சதவீதமும் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் 74 வேட்பாளர்களில் 6 பேர் மீது (8 சதவீதம்) குற்ற வழக்குகள் உள்ளன.

SCROLL FOR NEXT