அரசியல்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் போலீஸ்காரருக்குப் பாலியல் தொல்லை: திமுகவினர் இருவர் கைது

காமதேனு

சென்னையில் கனிமொழி எம்.பி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே டிச.31-ம் தேதி பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதுடைய பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியியல் சீண்டலில் ஈடுபட்டனர். பெண் காவலர் கதறி அழுத்ததை பார்த்த ஆய்வாளர் தாம்சன்சேவியர் தலைமையிலான போலீஸார் உடனே அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.

பாலியலில் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்

அவர்களைப் பிடித்து விசாரித்த போது, சாலிகிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பிரவீன்(23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம்(24) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் போலீஸாரைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் எம்எல்ஏ பிரபாகரராஜா தலையிட்டு இந்த பிரச்சினையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், பிடிபட்டவர்கள் மீது போலீஸார் எந்த நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்தனர்.

இந்த பிரச்சினையில் திமுகவினரின் நடவடிக்கை குறித்து பாஜக உள்ளிட்ட பல்வே கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரும் கோயம்பேடு துணை ஆணையர் முன்னிலையில் ஆஜராகி தெரியாமல் கைபட்டுவிட்டது என்றும், இதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறியதையடுத்து பெண் காவலர் தனது புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்பையும் தொடர்ந்து தெரிவித்து வந்ததால் நேற்று இரவு விருகம்பாக்கம் போலீஸார் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் பிரிவீன், ஏகாம்பரம் ஆகியோர் மீது அரசு ஊழியரைப் பணி செய்யாவிட்டாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் தொந்தரவு அளித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கட்சிக் கட்டுபாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக பிரிவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT