சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு: பேரவையில் பாமக - திமுக இடையே காரசார விவாதம்!
அரசியல்

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு: பேரவையில் பாமக - திமுக இடையே காரசார விவாதம்!

காமதேனு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அவசர கோலத்தில் கொண்டு வந்ததால் நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளோம். ஆணையம் கேட்டதாலேயே நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பது தொடர்பாக பாமக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

அந்த தீர்மானத்தின் மீது பேசிய பாமக சட்டமன்ற தலைவர் ஜி.கே. மணி, ’’ஆணையத்திற்கு ஒரு மாதம் கால அவகாசம் நீட்டித்தால் போதாதா ? எதற்காக 6 மாதம் நீட்டிக்க வேண்டும் ? அண்மையில் நடைபெற்ற அரசு தேர்வுகளில் ஒரு வன்னியர் கூட தேர்ச்சி பெறவில்லை. இது எவ்வளவு பெரிய அநீதி?’’ என்றார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ’’10.5 சதவீத உள்ஒதுக்கீடு எந்த சூழலில் எந்த நேரத்தில் எதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது ? தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நாளில் அவசர கோலத்தில் கொண்டு வந்ததால் நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளோம். ஆணையம் கேட்டதாலேயே நீட்டிப்பு வழங்கியிருக்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT