எர்ணாகுளம் - பாட்னா இடையேயான டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 
செய்திகள்

பெட்டிகளை விட்டு கழன்று சென்ற ரயில் எஞ்சின்: அச்சத்தில் உறைந்த பயணிகள்!

கே.காமராஜ்

கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெட்டிகளில் இருந்து தனியாக கழன்று சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்காக மத்திய அரசும், ரயில்வே துறையும் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமான பலனை தரவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அவ்வப்போது நடைபெறும் இந்த விபத்துகளில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

எர்ணாகுளம் - பாட்னா இடையேயான டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில்

இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் டாடா நகர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. காலை 9 மணி அளவில் ஷொரனூர் ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்த போது, திடீரென ரயில் என்ஜினுடன் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகள் திடீரென கழன்றுள்ளன. ரயில் என்ஜின் மெதுவாக சென்று கொண்டிருந்ததால், நல்வாய்ப்பாக பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. உடனடியாக ரயில் என்ஜின் நிறுத்தப்பட்டு, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் ஓட்டுநர் ஆகியோர் சோதனை செய்துள்ளனர்.

ஷொரனூர் ரயில் நிலையம்

அப்போது ரயில் என்ஜினில் இருந்து 3வது பெட்டிக்கும், 4வது பெட்டிக்கும் இடையே இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே பணியாளர்கள் உடனடியாக ரயிலில் இணைப்புகளை சரி செய்ததை அடுத்து ரயில் மீண்டும் தனது பயணத்தை துவங்கியது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பிறகே ரயில் பெட்டிகள் கழன்றதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ரயில் பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT