கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை 
செய்திகள்

விவேகானந்தர் பாறைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு திடீர் அனுமதி... செல்போன் கொண்டு செல்ல தடை!

கவிதா குமார்

பிரதமர் மோடி தியானம் செய்யும் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தென்மூலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் தியான மண்டபத்தில் வருகிற ஜூன் 1-ம் தேதி வரை தியானம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி

சுவாமி விவேகானந்தர் இதே பாறையில் 142 ஆண்டுகளுக்கு முன்பு 3 நாள் தவம் இருந்த நிலையில், அதே பாறையில் பிரதமரின் தியான நிகழ்வு நடப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று மாலை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 5.08 மணிக்கு வந்தார். பின்னர் அவர் மாலை 5.40 மணியளவில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலிலுக்குச் சென்றார்.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி

அங்கிருந்து 6 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் ‘விவேகானந்தர்’ படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். பின்னர் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி வணங்கினார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி இரவு அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தை தொடங்கினார். சனிக்கிழமை மாலை வரை வரை 45 மணி நேரம் பிரதமர் தியானம் செய்கிறார்.

பிரதமர் மோடி வருகை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவேகானந்தர் பாறை

பிரதமர் நரேந்திர மோடி வருகையால் கடும் சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். சுற்றுலா பயணிகள் செல்போன் மற்றும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT