சென்னை விமான நிலையத்தில் ஹஜ் பயணிகளை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் 
செய்திகள்

ஹஜ் பயணத்தில் 10 தமிழர்கள் வெயில் கொடுமையால் பலி; 326 பேர் நாடு திரும்பினர் - அமைச்சர் மஸ்தான் தகவல்

கே.காமராஜ்

ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு சவுதி அரேபியாவில் இருந்து 326 பேர் சென்னை திரும்பி உள்ளதாகவும், வெயில் கொடுமை காரணமாக 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு, உலகம் முழுவதிலுமிருந்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து கடந்த மே மாதம் 25ம் தேதி முதல் கட்ட பயணிகளுடன் ஹஜ் விமானம் புறப்பட்டுச் சென்றது. தமிழகத்திலிருந்து 5,801 பேர் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தனர். ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு முதல் குழு இன்று சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்

326 பேருடன் வந்த விமானத்தில் இருந்த பயணிகளை, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்எல்ஏ, ஹஜ் கமிட்டி செயலாளர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், ”புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ஹஜ் பயணத்தின் போது வெயிலின் தாக்கத்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.” என்றார்.

ஹஜ் யாத்திரீகர்கள்

மேலும், “மெக்காவிலிருந்து மதினாவிற்கு செல்லும் வழியில் நடந்த பேருந்து விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் இழப்பை தவிர்க்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்ப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.” என்று அவர் தெரிவித்தார்

SCROLL FOR NEXT