போலீஸ் எனக்கூறி மோசடி செய்து திருட்டில் ஈடுபட்டு கைதாகியுள்ள கங்காதேவி 
செய்திகள்

தோழிகள் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த போலி பெண் எஸ்.ஐ... தூத்துக்குடியில் பரபரப்பு!

கே.காமராஜ்

தூத்துக்குடியில் காவல் துறை உதவி ஆய்வாளராக எனக் கூறி தோழிகளின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை, போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதேவி. பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றுள்ள இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐபிஎஸ் ஆவது தனது லட்சியம் என பதிவிட்டுள்ளார். மேலும் தான் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும், அடையாள அட்டை வைத்திருப்பதாகவும் பலரிடம் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி மேற்கு காமராஜர் நகர் பகுதியில் தன்னுடன் பயின்ற தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தோழியின் தாயார் கிருஷ்ணவேணி என்பவரிடம், தான் சென்னையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும், என்கவுண்டர் விவகாரம் தொடர்பாக தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளதாகவும், இரண்டு நாட்கள் தங்கி செல்ல அனுமதி வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கொள்ளைச் சம்பவம் நடந்த பகுதி

அவர் போலீஸ் என்று கூறியதால், தங்க கிருஷ்ணவேணி அனுமதி அளித்துள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் தங்கி இருந்த கங்காதேவி, வீட்டில் இருந்த தாலி மற்றும் 2,000 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளார். இது தொடர்பாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி புகார் அளித்திருந்தார்.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று மற்றொரு தோழியான தாய் நகர் சுனாமி காலனி பகுதியில் வசித்து வரும் வளர்மதி என்பவரது வீட்டிற்கு கங்காதேவி சென்றுள்ளார். அங்கும் தான் போலீஸ் எனக் கூறியதோடு, வழக்கு தொடர்பாக இரண்டு நாட்கள் தங்கி செல்ல அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரை வளர்மதி தங்க அனுமதித்த நிலையில், வீட்டில் இருந்த 2,000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டும் கங்காதேவி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையம்

இது தொடர்பாக தாளமுத்து காவல் நிலையத்தில் வளர்மதியும் புகார் அளித்துள்ளார். இந்த இரண்டு புகார்களின் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார் கங்காதேவியை தேடி வந்தனர். இதனிடையே மேட்டுப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று வந்த கங்காதேவியை வளர்மதியும் அவரது கணவரும் பிடித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீஸார், வேறு யாரிடமாவது இதே போன்ற மோசடியில் கங்காதேவி ஈடுபட்டு உள்ளாரா என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT