செய்திகள்

தவெக சார்பில் இன்று இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா; அதிகாலையிலேயே மண்டபத்திற்கு வந்த விஜய்

வ.வைரப்பெருமாள்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2ம் கட்டமாக இன்று விருது, கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கி 2026 சட்டப் பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருது, கல்வி ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறார்.

கடந்த மாதம் 28ம் தேதி முதல்கட்டமாக சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 127 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருது, ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று 19 மாவட்டங்களைச் சேர்ந்த 107 தொகுதிகளைச் சேர்ந்த 642 மாணவ, மாணவிகளுக்கு இன்று, விருது மற்றும் கல்வி ஊக்கத் தொகைகளை தவெக தலைவர் விஜய் வழங்க உள்ளார். இதையொட்டி அவர் இன்று அதிகாலையிலேயே விழா நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார்.

முதல்கட்ட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மாணவ, மாணவிகளிடையே சுருக்கமாக உரையாற்றினார். அன்றைய தினம் அவர் பேசுகையில், தமிழகத்துக்கு பல நல்ல தலைவர்கள் தேவை என்றும், போதைப் பொருள் புழக்கம் ஒரு பெற்றோராக தனக்கு மிகுந்த அச்சமளிக்கிறது என்றும் பேசினார். மேலும் மாணவர்கள் படிக்கும்போதே மறைமுக அரசியலில் ஈடுபடலாம்.

நாளிதழ்களில் வரும் செய்தி, கருத்துக்கு இடையே உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். அன்றைய தினம் விஜயின் பேச்சை கொண்டு அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்றைய நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பாக உரையாற்றுவாரா அல்லது சுருக்கமாக விழா தொடர்பாக மட்டும் பேசிவிட்டு செல்வாரா என்பது குறித்து அவரது தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT