கத்துவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் 
செய்திகள்

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

வ.வைரப்பெருமாள்

ஜம்மு - காஷ்மீரில் நேற்று நள்ளிரவு ராணுவத் தளத்தைத் தாக்கிய பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஷிவ் கோரி குகைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 9 பக்தர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 33 பேர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் அபு ஹம்ஸா உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரியாசி மாவட்டத்தில் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

இந்நிலையில், கத்துவாவில் நேற்று இரவு நடந்த மோதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார், அதே நேரத்தில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டார். ஜம்மு மண்டலத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆனந்த் ஜெயின், அப்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டார்.

இந்நிலையில் மூன்றாவது தாக்குதல் சம்பவமாக ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் உள்ள சத்தர்கலா ராணுவ தளத்தில் நேற்று நள்ளிரவு போலீசார் மற்றும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் கூட்டுப்படை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளை நோக்கி, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதிகள்

இந்த மோதலில் 5 வீரர்கள் மற்றும் ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரி (எஸ்பிஓ) ஆகியோர் படுகாயமடைந்தனர். கத்துவா தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதியை கண்டறிந்து பிடிக்க, ஹிராநகர் பகுதியில் ட்ரோன் மூலம் பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 3 நாள்களாக பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து வருவதால் அப்பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT