டெல்லி அமைச்சர் அதிஷியை மருத்துவமனையில் சந்தித்த அகிலேஷ் யாதவ் 
செய்திகள்

மருத்துவமனையில் அமைச்சர் அதிஷியை சந்தித்த அகிலேஷ் யாதவ்; டெல்லி அரசின் போராட்டத்துக்கு ஆதரவு

வ.வைரப்பெருமாள்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மருத்துவமனையில் சந்தித்து, குடிநீர் பிரச்னையில் ஆம் ஆத்மி அரசின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

டெல்லியில் நிலவி வரும் கடும் குடிநீர் பற்றாக்குறைக்கு இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்து உரிய தண்ணீர் பங்கீட்டை உறுதி செய்ய ஆம் ஆத்மி அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் யமுனையில் டெல்லிக்கு வர வேண்டிய 100 எம்ஜிடி (ஒரு நாளைக்கு மில்லியன் கேலன்) தண்ணீரை விடுவிக்கக் கோரி கடந்த 21ம் தேதி, நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அமைச்சர் அதிஷி

தொடர்ந்து 5 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் நேற்று அதிகாலை அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிஷியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அவர் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில், அமைச்சர் அதிஷி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று நேரில் வந்து அவரை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “அதிஷி துணிச்சலானவர், மக்களுக்காக எப்படிப் போராட வேண்டும் என்று தெரிந்தவர். டெல்லி மக்களின் பிரச்சனையை தீர்க்க போராடி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததால், முதல்வர்களின் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யாமல் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு மிக அநீதி இழைத்துள்ளனர். அவர் டெல்லி மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறார். ஆனால் மத்திய அரசு தடைகளை உருவாக்கி வருகிறது" என்றார்.

SCROLL FOR NEXT